
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தில் ரெட்டிதோப்பு, பெத்தலோம், கம்பி கொல்லை பகுதி மக்கள் ஆம்பூர் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், பள்ளி, கல்லூரிகள், சந்தை போன்றவற்றுக்கு வரவேண்டும் என்றால் அங்குள்ள ரயில்வே சுரங்கபாதையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த சுரங்கபாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பிவிடுகின்றன. மழை தண்ணீர் வெளியே செல்ல எந்த நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகமும், நகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த வழியாகவே மழை நீரில் இறங்கி பொதுமக்கள் சென்று வந்துக்கொண்டு உள்ளனர்.
மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும், மேலும் தங்களது பகுதிகளில் சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்து அங்குள்ள அச்சகம் ஒன்றில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்தனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக நோட்டீஸ் அச்சடித்த அச்சகத்துக்கு சென்று, அனுமதி பெறாமல் இயங்கியது என்கிற குற்றச்சாட்டை சுமத்தி, வாணியம்பாடி கோட்டாச்சியர் காயத்ரி உத்தரவின்படி அதனை மூடி சீல் வைத்தனர். அதோடு, நோட்டீஸ் அச்சடித்த அப்பகுதியைச் சேர்ந்த 5 பேரை அழைத்து மிரட்டினர்.
இந்நிலையில் போராட்டம் நடைபெறுவதாக கூறியிருந்த அக்டோபர் 6ஆம் தேதி இன்று, அப்பகுதி வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரத்தில் நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய அப்பகுதியை சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்களில் பெண்கள் சிலர் ஆட்டோ பிடித்து காவல்நிலையம் வந்து நாங்களும் போராட்டம் செய்கிறோம் எங்களையும் கைது செய்யுங்கள் எனச்சொல்லி கைதாகினர். இப்போது அப்பகுதி ஆண்கள், இளைஞர்கள், பெண்கள் வரிசையாக காவல்நிலையத்துக்கு வந்து கைதாகிக்கொண்டு உள்ளனர். காலை 1 மணி வரை 96 பேர் கைதாகியுள்ளனர். இதனால் போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
கைதானவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் போலீஸார் தங்கவைத்துள்ளனர். போராட்டம் செய்து கைதான பொதுமக்களிடம் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன் நேரில் சென்று, உங்கள் பிரச்சனைகளை நான் விரைவில் தீர்த்து வைக்கிறேன் என சமாதானம் பேசினார். தேர்தலில் ஓட்டு கேட்டு வரும்போது இப்படித்தான் சொன்னிங்க. தேர்தல் முடிஞ்சி ஒருவருஷமாச்சி. இன்னும் எதுவும் செய்யல என கோபமாக பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.
கரோனா வந்துடுச்சி, அதனால்தான் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. விரைவில் சரி செய்ய முயற்சி செய்கிறேன் என வாக்குறுதி தந்துள்ளார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் நசீர், இது பல ஆண்டுகால பிரச்சனை. உடனடியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். அதனை விடுத்து போராடும் மக்களை நசுக்குவது, அச்சகத்துக்கு சீல் வைத்தது கண்டனத்துக்குரியது என்றுள்ளார்.