கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாத்துக்கூடலை சேர்ந்தவர் செல்வம். இவர் தன்னுடைய வயலில் தோண்டிய மண்ணை குவித்து வைத்திருந்தார். இதுகுறித்து அறிந்த விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன், செல்வத்திடம் இது பற்றி விசாரணை நடத்தினார்.
வயலில் உள்ள மண்ணை வெட்டி எடுத்ததற்காக செல்வத்திடம் தாசில்தார் ஸ்ரீதரனும், அவரது டிரைவர் கந்தசாமியும் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு செல்வம் பேரம் பேசி ரூ.60 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து முதல் தவணையாக ரூ.20 ஆயிரத்தை செல்வம், தாசில்தார் ஸ்ரீதரனிடம் கொடுத்து விட்டாராம்.
இந்நிலையில் மீதித்தொகை ரூ.40 ஆயிரத்தை தாசில்தார் ஸ்ரீதரனும், டிரைவர் கந்தசாமியும் கேட்டு வற்புறுத்தி வந்தனர். பாக்கி பணத்தை தருவதாக கூறிய செல்வம் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வத்திடம், துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சண்முகம், திருவேங்கடம் மற்றும் போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை செல்வத்திடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
தாசில்தார் இருக்கும் இடத்தை அறிந்துக்கொண்டு, தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்ற செல்வம், அப்போது அங்கிருந்த தாசில்தார் ஸ்ரீதரன், டிரைவர் கந்தசாமி ஆகியோரிடம் செல்வம் ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். இதை அவர்கள் வாங்கிய போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.