Skip to main content

“தமிழக அரசு குழு அமைப்பது ஏமாற்று வேலை” - அன்புமணி 

Published on 05/02/2025 | Edited on 05/02/2025
Anbumani says TN government should directly implement old pension scheme

தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று, 2026 தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்குவர் என்பது உறுதி என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக இ.ஆ.ப. அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.

மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது என்பதால், அந்த முறையை மாற்றி விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் அரசுகள் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் மறுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களும், போராட்ட எச்சரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.  அவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவும்,  அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும்  ஏமாற்றுவதற்காகவும் தான் இப்படி ஒரு வல்லுனர் குழுவை திராவிட மாடல் அரசு அமைத்திருக்கிறது.

இன்றைய நிலையில், இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். அதேபோல், மத்திய அரசும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு நினைத்தால் நட்ப்பு மாதத்திலிருந்தே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு மனம் தான் இல்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கிறோம் என்று காலம் கடத்துவது தமிழக அரசுக்கு புதிது அல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நாடகத்தை தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 2015&16ஆம் ஆண்டுகளில்  தீவிரமடைந்த நிலையில், 2016&ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்ததைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது  குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார். 2016 தேர்தல் முடிந்து ஜெயலலிதா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து காலமாகும் வரை அந்தக் குழு அதன் பணியை தொடங்கவில்லை.

அதன்பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் மீண்டும் ஒரு வல்லுனர் குழு இதே காரணத்திற்காக அமைக்கப்பட்டது. அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தாக்கல் செய்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பழைய ஓய்வூதியத்திட்டம் கனவாகவே தொடர்ந்தது. 2021&ஆம் ஆண்டு தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளை கடத்தி விட்டு, இப்போது குழு அமைக்கும் பழைய நாடகத்தையே தூசு தட்டி அரங்கேற்றியுள்ளார்.

தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கும் குழு  தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செய்லப்டுத்தலாம் என்பது குறித்த அதன் அறிக்கையை தாக்கல் செய்ய 9 மாதம் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. அந்த 9 மாத காலக் கெடு முடிவடையும் நிலையில், அதற்கான கெடு மேலும் 3 மாதங்களோ, 6 மாதங்களோ நீட்டிக்கப்படும். அதற்குள்ளாக திமுக அரசின் பதவிக்காலமும் நிறைவடைந்து விடும். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடந்த காலங்களைப் போல ஏமாற்றம் தான் மிஞ்சும்.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதெல்லாம் ஏமாற்று வேலை தான். எனவே, குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத்  திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று, 2026 தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்குவர் என்பது உறுதி” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்