Skip to main content

“இது முழுக்க பெண்களுக்கு எதிரான சட்டத்திருத்தம்..” திருமண வயது உயர்வு குறித்து வக்பு வாரியத் தலைவர்

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

"This is an amendment against all women." Abdul Rahuman
கோப்புப் படம் 

 

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தும் மத்திய பா.ஜ.க. அரசின் முடிவு தவறானது. பெண்களின் திருமண வயதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உண்டு. இது முழுக்க பெண்களுக்கு எதிரான சட்டத்திருத்தம், அதிகமான பாலியல் சீர்கேடுகளுக்கு இது வழிவகுக்கும். நாட்டின் கலாச்சார பெருமைக்கும் ஊறுவிளைவிக்கும். மோடி அரசு இதனைத் திரும்பப் பெற வேண்டும். 

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. அவரது தலைமை பண்பு மிளிர்ந்து நிற்கும் செயல் திட்டங்கள் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளையும் நாட்டின் மிகச்சிறந்த முன்னோடியான வகையில் கொண்டு வருவதற்கான சிறப்பான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார். 

 

வக்பு வாரியம் வெளிப்படைத்தன்மையுடன் பாரபட்சம் இல்லாமல் அரசியல் குறுக்கீடு இன்றி செயல்படுவதற்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன்படி எவ்வித அரசியல் குறுக்கீடும் இதில் இல்லாமல் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது.  இந்தியாவில் பாதுகாப்புத் துறை ரெயில்வே ஆகியவற்றுக்கு அடுத்ததாக வக்பு வாரியத்திற்கு அதிக சொத்துக்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஏராளமான வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதனை கணக்கெடுத்து மீட்கும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றோம்.

 

அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் வக்பு வாரிய சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசு அமைந்த பிறகு இதுவரை சென்ற 6 மாத காலத்தில் மட்டும்  ரூபாய் மூவாயிரம் கோடி  மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சட்டரீதியாக நீண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருப்பதால் சொத்துகளை மீட்பதில் தாமதம் நிலவுகிறது. விரைவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் அனைத்தையும் மீட்போம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்