
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 186 பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்த குழு பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை, காஞ்சீபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டறைபெரும்புதூர் கிராமத்திலும் கட்டப்பட்டுள்ள புதிய சட்டக்கல்லூரிகளுக்கு இடம் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டக்கல்லூரிகளுக்கு இடம் மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐகோர்ட்டின் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எனவே, கல்லூரி இடம் மாற்றுவதை யாராவது தடுக்கும் விதமாக செயல்பட்டால், அது இந்த ஐகோர்ட்டின் தீர்ப்பை மீறி செயல்படுவதாகி விடும்.
மேலும், கடந்த 1-ந்தேதி முதல் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் எந்த ஒரு வகுப்புகளும் நடத்தப்பட வில்லை. செமஸ்டர் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நடப்பு கல்வியாண்டின் வகுப்புகள் வருகிற ஜூலை 9-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, அதற்கு முன்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றம் செய்யவேண்டும்.
இந்த இடம் மாற்றம் செய்யும் பணியில் ஈடுபடும் சட்டக்கல்லூரி அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தகுந்த பாதுகாப்பை தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் வழங்கவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.