Skip to main content

"கச்சத்தீவு திருவிழாவுக்கு மீனவர்களை அனுமதியுங்கள்"- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

"Allow fishermen for Kachchativu festival" - Tamil Nadu Chief Minister's letter to the Foreign Minister!

 

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04/02/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (04/02/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தடையின்றிப் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் இன்று (04/02/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீன பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது தமது கவனத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுப் பூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர் என்றும், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றிப் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்துக் கடிதத்தினை வழங்கினார்". இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்