1991 - 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்தபோது முறைகேடு செய்ததாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
புகார் மனுவில், மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக் கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடம் இருந்து ரூபாய் 15.45 லட்சம் முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. முழுமையாக விசாரணை நடத்தியது.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தரப்பு முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதேபோல், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு இன்று (29/09/2021) விசாரணைக்கு வந்தபோது, ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபு, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, மூன்று பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கான தண்டனை விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்னாள் அமைச்சர் இந்திர குமாரிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது கணவர் பாபுவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்முகத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.