திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசிய போது, " தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ள வேண்டும், அதற்கான நிதி தேவை ஆகியவை குறித்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் 7 அல்லது 8 மாவட்டங்கள் மீதி உள்ளன. அந்த மாவட்டங்களிலும் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஆய்வு முடிந்த பின்னர் ஆய்வு அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்து, எந்தெந்த பணிகளை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அனுமதி பெற்று, அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.