Skip to main content

அரியர் தேர்வு அட்டவணையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

all universities arrears exam chennai high court

 

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாகவோ, ஆன்லைன், மூலமாகமோ அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான அட்டவணையை பிப்ரவரி 4- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

 

இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

 

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையில், சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் நடத்தாமல், அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும், தேர்வே நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

 

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் நலன் கருதியே முன்பு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போதைய நிலையில் கரோனா சூழல் மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, அரியர் தேர்வு தொடர்பான தேர்வு அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் பிப்ரவரி 4- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான அட்டவணையை பிப்ரவரி 4- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்