தொண்டர்களால் அதிமுக வழி நடத்தப்படுகிறது என்றும், கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக திமுக மாறிவிட்டது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் உதய ராமசாமி வரவேற்றார். அதுபோல் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச் செல்வனும் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது, அண்ணாவின் உழைப்பும் எம்ஜிஆருக்கு மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியும் தான், கடந்த 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடிப்பதற்கு காரணமாகும். அண்ணா மறைவுக்குப் பிறகு திமுகவை தனது குடும்பத்தின் அடிமை இயக்கமாக கருணாநிதி மாற்றிவிட்டார். திமுகவினரை அவருடைய குடும்பத்திற்கு உழைக்கும் கரங்கள் ஆகிவிட்டனர். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அவருக்குப் பிறகு இன்பநிதி என்று ஒரே குடும்பத்தால் சுரண்டப்பட்டு திமுக பரிதாபமான நிலைக்கு ஆளாகி கொண்டிருக்கிறது.
திமுக என்பது திருக்குறளை முன்னேற்ற கழகம் ஆகிவிட்டது. ஆனால் அதிமுக தொண்டர்களால் நடத்தப்படுகிற ஜனநாயக இயக்கமாக செழித்து நிற்கிறது. அதிமுகவில் தான் சாமானியனும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியும் பச்சை மையில் கையெழுத்து போடும் பாக்கியத்தை தரும் கட்சி அதிமுக. ஆனால் திமுக ஜெகத்ரட்சகன், டிஆர் பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், என செல்வந்தர்களை உயர்த்தும் முதலாளித்துவ இயக்கம் ஆகிவிட்டது.
திமுக ஆட்சியில் மின் வெட்டு இருந்தது கொலையும், கொள்ளையும் நில அபகரிப்பும் தலை விரித்தாடுகிறது. ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. வறுமை வேலையின்மையை தகர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அதுபோல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம். நாம் யாரையும் அடிமையாக கருத மாட்டோம். அதேவேளையில் யாரிடமும் அடிமையாக இருக்க மாட்டோம்.
திமுக ஆட்சிக்காலத்தில் 2006- 2011 வரை தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீட்டாக 26 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் 2011- 2019 ஆண்டுகள் வரை அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் 73 ஆயிரத்து 308 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். வருகிற இடைத்தேர்தலில் அதிமுக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறது என்றும் கூறினார் இக்கூட்டத்திற்கு மாவட்டம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.