நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் செவலை சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது.
தியேட்டர் முன்பு ரசிகர்கள் பேனர் மற்றும் அஜித்தின் 25 அடி உயர கட்-அவுட் வைத்திருந்தனர். காலை 7.30 மணி சிறப்பு முதல் காட்சியை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரையங்கம் முன்பு திரண்டிருந்தபோது ரசிகர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் அஜித்குமாரின் கட்-அவுட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத வகையில் கட் அவுட் சரிந்தது.
இதில் ஏழுமலை (வயது 20), ஸ்ரீதர் (25), முத்தரசன் (18), பிரதாப் (21), அருண் (17), பிரபாகரன் (25) ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அஜித் ரசிகர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிரதாப், முத்தரசன், ஸ்ரீதர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தியேட்டர் உரிமையாளர் சுதர்சனம், மேனேஜர் சேகர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.