எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றினால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால்தான், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அத்திட்டத்தை எதிர்க்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.
சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேகோ சர்வ் அருகே 22 கோடி ரூபாயில் புதிதாக மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாள்களாக இப்புதிய மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது வந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமையன்று (18.11.2018) அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அதையடுத்து, 55.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியது:
சேலம் மாவட்டம் அரியானூர், மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க, உயர்மட்ட பாலம் அமைக்கக் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளார். இப்பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதனால் ஏற்படும் சாலை விபத்துகளின்போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுப்பதே அரசின் நோக்கம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டப்பணிகள் தொடங்கப்படும். இந்த சாலை சேலத்திற்கு மட்டுமின்றி, மதுரை, கோவை, கேரளா செல்லவும் பயன்படும்.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைவதன் மூலம் 70 கி.மீ. வரை பயண தூரம் குறைகிறது. அதனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவும் குறைவதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதுபோன்ற நல்ல திட்டங்கள் வரும்போது அவற்றை வரவேற்க வேண்டும்.
முக்கியமான திட்டம் என்பதால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயலாக்க ஒத்துழைக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தினால் அதிமுக அரசுக்கு புகழ் கிடைத்துவிடும் என்பதால்தான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றே, அவர் வழியில் அமைந்த இந்த அரசும் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இளைய தலைமுறையினர் விஞ்ஞானக் கல்வியறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் இதுவரை 38 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் 15 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் 110 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஓராண்டில் முடிக்கப்படும்.
விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள காலியிடங்களில் காய்கறி தோட்டம் அமைக்க இலவசமாக விதைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாகத் திகழ தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.