பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (4ம்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருச்சி மக்களவை தொகுதிக்கான அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், குமார், பரஞ்ஜோதி, அதிமுக வேட்பாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்து முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது பேசிய விஜயபாஸ்கர், “பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்து திணிப்புகள். பலமுறை இதுபோன்ற கருத்துக்கணிப்புகளையெல்லாம் தாண்டி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால், முகவர்கள் கருத்துக் கணிப்பு குறித்துக் கவலைப்படாமல், ஓட்டு எண்ணிக்கைக்கு மகிழ்ச்சியாகவும், தெம்பாகவும் செல்ல வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்கு அதிமுகவின் 534 ஏஜென்ட்டுகளும், கம்பீராக ஜமால் முகமது கல்லூரிக்குள் நுழைய வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முகவர் பணியே மிகவும் கவுரமான, அங்கீகாரமான பணியாகும். அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கருத்தை ஓங்கி ஒலிக்க வேண்டும். ஆட்சேபனை இருந்தால் அழுத்தமாகக் கூற வேண்டும். எந்த முகவரும் ஆட்சேபனை சொல்லிவிட்டால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். அதனைச் சரியாகக் கண்காணிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் 6 தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது அவை குறித்துப் பல தகவல்கள், கருத்துகள் வரும். அவற்றைக் காதில் வாங்காமல் அவரவர் அறை ஓட்டு எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முகவர்கள் கடைசி வரை அனைத்து சுற்றுகளும் முடிவடையும் வரையில் அறையில் இருக்க வேண்டும். சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கையை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக பதிவேட்டில் பதிவிட வேண்டும். திருச்சி தொகுதியில் நாம் கடுமையான பணியாற்றி இருக்கிறோம். அதனால் வெற்றி பெறுவதில் உறுதியாக உள்ளோம். அனைத்து சுற்றுகளும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால், அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்தச்சூழலாக இருந்தாலும், கடைசி வரை இருந்து போராடி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற செய்தியைப் பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்..
எல்லா கருத்துக்கும் விடை 4-ஆம் தேதிதான் கிடைக்கும். அதுவரை எந்தப்பேச்சைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். எந்தப்பிரச்சனையாக இருந்தாலும், உங்களுக்காக குரல் கொடுக்க அனைத்து நிர்வாகிகளும் வெளியில்தான் இருப்போம். ஓட்டு எண்ணிக்கை முகவர்கள்தான் வெற்றி செய்தியை எங்களுக்கு முதலில் தர வேண்டும். கருத்துக் கணிப்புகளைத் தாண்டி திருச்சி உட்பட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்’’ என்றார்.
கூட்டத்தில், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, தலைமை முகவர் சின்னதுரை, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.