Skip to main content

'ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா?'-இபிஎஸ் பதில் 

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
'AIADMK competition in Erode by-election?'-EPS Answer

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (10.01.2025)  தொடங்கியுள்ளது. வரும் 17ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள சந்திரகுமார் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக முதலமைச்சரும் தற்பொழுது துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலினும் கூறினர். ஆனால் இப்பொழுது வெற்றி பெற்ற பின்னர் மத்திய அரசு நினைத்தால்தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என அறிவித்து விட்டார்கள். நாங்கள் அப்போதே சொன்னோம் இது நீதிமன்றத்தில் இருக்கிறது. மத்திய அரசு நினைத்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று சொன்னபோது எங்களை ஏளனமாக பேசிய முதலமைச்சர். நேற்றைய தினம் அவரே (மு.க.ஸ்டாலின்) நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டு விட்டார். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்' என்றார்.

சார்ந்த செய்திகள்