
திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியையும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரைச் சேர்ந்த மாணவனும் கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் மாயமாகினார்கள். அதனைத் தொடர்ந்து 6-ம் தேதி மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை எனவும், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த துறையூர் காவல்துறையினர் சர்மிளாவின் செல்போனை பின்தொடர்ந்த நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிக்கு சென்றது தெரியவந்தது. இறுதியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியையின் சினேகிதி வீட்டில் இருவரும் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச் செல்வன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் திருவாரூரில் சுற்றித் திரிந்து, பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியை சர்மிளாவின் தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர் மைனர் என்பதாலும் ஆசிரியை அதிக வயதுடையவர் என்பதாலும் பள்ளி ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.