Skip to main content

தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

Advice to stock up on essentials!

 

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள பொதுமக்களை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

 

பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (17/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நவம்பர் 18- ஆம் தேதி அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600- க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்பி புகைப்படம் எடுக்கக்கூடாது. தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்புப் பெட்டிகளை தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

 

மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044- 25619204, 044- 25619206, 044- 25619207, 044- 25619208, 044- 25303870 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 94454- 77205, 94450- 25819, 94450- 25820 மற்றும் 94450- 25821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்