orphanage

பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த புனித ஜோசப் ஆதரவற்ற முதியோர் இல்லம் மூடப்படும் என்றும் தற்போது தங்கியுள்ள முதியவர்கள் மாற்று இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்தவர்கள் உடல்கள் பதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து எலும்புகள் சட்டவிரோதமாக கடத்துவதாகப் புகார் எழுந்தது. மேலும் இங்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் எலும்புக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கான உரிமம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் தற்போது வரை உரிமம் இன்றி இயங்கி வருகிறது. இங்கு தங்கி இருப்பவர்களுக்கு மருத்துவ வசதியும் அளிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கும் புகார்களை தொடர்ந்து, இன்று ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, காவல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதைதொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் இன்று பிறப்பித்த உத்தரவில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். அதுவரை பாலேஸ்வரம் ஆதரவற்றோர் இல்லம் மூடப்படும். தற்போது தங்கியுள்ள முதியவர்கள் மாற்று இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.