தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27ந்தேதி மற்றும் 30ந்தேதி என நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சி பஞ்சாயத்துக்கள், 18 ஒன்றியங்களில் உள்ள 341 இடங்களில் 338 இடங்களுக்கான தேர்தல், 34 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கான வாக்குபதிவு, 6207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 4663 இடங்களுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்குபதிவு இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 27ந்தேதி நடைபெறும் முதல் கட்ட வாக்குபதிவில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் என 9 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 9 ஒன்றியங்களில் மொத்தம் 1930 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 498 கிராம ஊராட்சித்தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 3480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, போளுர், ஆரணி, மேற்கு ஆரணி, வந்தவாசி, சேத்பட்டு ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறும். இங்கு மொத்தம் 1590 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 160 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 362 கிராம ஊராட்சித்தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 2727 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குபதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள சுபம் பிரிண்டர்ஸ் என்கிற அச்சகத்தில் வாக்குசாவடிக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்காளரை அடையாளப்படுத்தும் சிலிப் போன்றவற்றை அச்சடித்துள்ளது மாவட்ட தேர்தல் பிரிவு. இந்த அச்சகம் அதிமுக முன்னாள் எம்.பியான வனரோஜாவின் மருமகனுடையது. இங்கு செல்லும் அதிமுகவினர் பலர் அதிகாரிகள் அச்சடித்ததுப்போல் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளரை அடையாளப்படுத்தும் சிலிப்களை அச்சடித்து சென்றுள்ளனர் என்கிற குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி கலெக்டர் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவினர் இப்போதே தேர்தல் விதிமுறை மீறல்களில் சர்வசாதாரணமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என்றும் இதனை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை என்றும் வாக்குபதிவின்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும் இன்னும் என்னென்ன செய்வார்களோ என அச்சத்தில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.