தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தது. இதற்காக இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் பெரும்பான்மையோடு ஆட்சி நடத்த முடியும் என்பதால் தனக்கு தோதாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணிக்கு இழுத்தது. இதில் தேமுதிகவை விட பாமகவை அதிகம் நம்பியது ஆளும்கட்சியான அதிமுக.
அதற்கு காரணம் 22 தொகுதிகளில் திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகள் வட மாவட்டங்களில் வந்தது. அங்கு பாமகவுக்கு செல்வாக்கு இருந்ததாலே அதற்கு முக்கியத்துவம் தந்து, அந்த கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியது. அதோடு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய வரிகள், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதாகும்.
தேர்தல் முடிவில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக – பாமக – தேமுதிக – தமாக கட்சிகள் அமைத்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தோல்விக்கு காரணம் அதிமுகவினர் முழுமையாக தேர்தல் பணி செய்யாததே என்கிற குற்றச்சாட்டு அதிமுக மீது வைக்கின்றனர் பாமகவினர். இது தொடர்பாக பாமக தரப்பில் இருந்து நம்மிடம் பேசியவர்கள், எங்களை நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களுக்கு இடைத்தேர்தல் வெற்றி மட்டும் தான் தேவையாக இருந்திருக்கிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது.
நாங்கள் வலிமையாகவுள்ள சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் போன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதே எங்களின் வாக்குகளால் தான். சந்தேகமிருந்தால் கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி பெற்ற வாக்குகளை எடுத்துப்பாருங்கள் புரியும். எங்கள் ஆதரவில் வெற்றி பெற்றதால் தான் இன்று ஆட்சியில் அவர்களால் தொடர முடிகிறது. அதனால் எங்களுக்கு ஒதுக்க வேண்டிய ராஜ்யசபா பதவியை அதிமுக ஒதுக்க வேண்டும். மீறி ஏதாவது விளையாடினால் எங்கள் பலத்தை பிற்காலத்தில் காட்ட வேண்டி வரும் என்றார்கள்.
அதிமுகவினரோ, அவுங்களுக்கு பலமிருக்கிறது என பாமக தான் சொல்லிக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு எந்த பலமுமில்லை என்பதை சட்டமன்ற தேர்தல்கள் மட்டுமல்ல பொதுத்தேர்தல்களும் காட்டி தந்துள்ளன. அதனால் ராஜ்யசபா தருவதை யோசிக்க வேண்டும் என எங்கள் தலைமை நினைக்கிறது என்கிறார்கள்.