உச்சநீதிமன்றம் விடுதலை செய்தியை வெளியிட்ட பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, தனது விடுதலைக்காக முயற்சி மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்த பேரறிவாளன், எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "அ.இ.அ.தி.மு.க. அரசுதான் பேரறிவாளன் விடுதலைக்கு முழு காரணம். அ.இ.அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கையே பேரறிவாளன் விடுதலைக்கு காரணம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எடுத்த தொடர் முயற்சியும் பேரறிவாளன் விடுதலைக்கு காரணம். பேரறிவாளன் நல்ல உடல் நலத்துடன், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வதை நேரில் சந்தித்த பேரறிவாளன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.