சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் மற்றும் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (18/06/2022) காலை நேரில் சந்தித்துப் பேசினர்.
இதில், கட்சியின் ஒற்றைத் தலைமை விவகாரம், அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் உள்ளிட்டவைப் பற்றி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் கூறுகின்றன.
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி கட்சி தான் முடிவு செய்யும். பெரம்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து தாக்கப்பட்டது கண்டனத்திற்குரிய செயல். எனது வாகனத்தைத் தொண்டர்கள் தொட்டத்தை, உடனே தாக்குதல் என்கிறார்கள். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தாக்குதல் நடத்தினால் எங்கள் கை பூப்பறித்துக் கொண்டிருக்காது" எனத் தெரிவித்தார்.