கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சராக கே.சி. வீரமணி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கே.சி. வீரமணி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி. வீரமணிக்கு எதிராகக் குற்றம் சாட்டி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், “கே.சி. வீரமணிக்கு எதிராக, மனுதாரர் அளித்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவையடுத்து கே.சி. வீரமணி தாக்கல் செய்த வேட்புமனு,பிரமாண பத்திரம் மற்றும் வருமான வரி கணக்குகள் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கே.சி. வீரமணி, தனது பிரமாண பத்திரத்தில் ஏராளமான சொத்துகள், பணப் பரிவர்த்தனைகளை மறைத்திருப்பது தெரியவந்தது.
அதோடு வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கணக்கில் குறிப்பிட்டிருந்த வருமானமும், தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானமும் தொடர்பில்லாமல் முரண்பாடாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில், திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 1இல் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது திட்டமிட்டு பொய்யான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தல், வேண்டுமென்றே சொத்து விவரங்களை மறைத்துக் காட்டியது போன்ற காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (17.12.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி. வீரமணி நீதிமன்றத்தில் ஆஜரானர். இருப்பினும் எதிர் மனுதாரரான ராமமூர்த்தி ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். மேலும் ஜனவரி 6ஆம் தேதி (06.01.2025) கே.சி. வீரமணி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கே.சி.வீரமணி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ என்ற பிரிவின் கீழ் நாட்டிலேயே முதல்முறையாக கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.