Published on 17/09/2019 | Edited on 17/09/2019
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். அதோடு, பேனர் அடித்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
ஆனால் சாலையின் நடுவில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்பு ஜெயகோபால் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்த பின்பு, உடல்நிலை சரியில்லை என்று பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் போலீஸார் விசாரணைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு ஜெயபால் இல்லாதது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுவதால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.