Skip to main content

“ஆங்கிலத்தில் பேசச்சொல்ல நீங்கள் யார்?” - துணை ராணுவ வீரரின் வைரல் வீடியோ

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

actor siddharth madurai airport issue crpf viral video

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சித்தார்த் அவ்வப்போது சமூகப் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

 

இந்நிலையில், நடிகர் சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஐஎஸ்எஃப்’ (CISF) அதிகாரிகள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அவர்கள் வயதான என் பெற்றோரிடம் பையிலிருக்கும் நாணயங்களை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் இந்தியில் தொடர்ந்து எங்களிடம் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். ஆனாலும் இந்தியில் பேசியபடியே இருந்ததற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனத் திமிராகப் பதிலளித்தார்கள். வேலையில்லாத மக்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்நிலையில், துணை ராணுவ வீரர் ஒருவர் இது குறித்து பேசிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் "இந்திய துணை ராணுவ வீரர்களை ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் ஏன் உங்களிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். நாங்கள் என்ன பிரிட்டிஷ்காரர்களா. இந்திய மொழியில் ஏதாவது ஒரு மொழியில் பேசச் சொல்லுங்கள், பேசுகிறோம். தமிழில் பேசுங்கள் அங்குக் கண்டிப்பாக ஒருத்தங்க இருப்பாங்க. எனக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லிட்டு, தெலுங்குல பேசுங்கள், கண்டிப்பாக  பேசுவாங்க. வெள்ளைக்காரர்களே இங்கு வந்து ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

உங்கள் பெற்றோர் பையில் இருந்த சில்லறை காசுகளை எடுக்க சொன்னாங்கனு சொன்னதை எந்த மொழியில் சொன்னார்கள் .நீங்கள் அதை எப்படிப் புரிந்து கொண்டீர்கள். சைகை மொழியில் சொன்னார்களா? வேலை இல்லாதவர்கள் ரொம்ப துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். திரையுலகில் நீங்கள் செய்த சில்மிஷம் எல்லாம் எங்களுக்கு தெரியும். டூட்டி பார்ப்பவர்களிடம் கண்ணியமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் இல்லை, ரெண்டு மணி நேரம் சந்தேகத்தில் நிற்க வைத்தாலும் நின்று தான் ஆக வேண்டும். ஒரு எட்டு நடந்து போக முடியாது. நாங்கள் டூட்டி பாக்குற இடத்துல எங்களுக்கு தான் பவர். எதுக்கு எடுத்தாலும் கும்பிடு போட்டுட்டு போறதுக்கு அரசியல்வாதி இல்லை நாங்க. புரிஞ்சுக்கோங்க" என்று பேசியுள்ளார். (துணை ராணுவ வீரர் ஒருமையில் பேசி உள்ளதை நாகரிகம் கருதி இங்கு பன்மையில் வெளியிட்டு உள்ளோம்).

 

 

சார்ந்த செய்திகள்