ஜவ்வரிசிக்கு நியாயமான விலை கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆத்தூரில் புதன்கிழமை (29.09.2021) நடந்த நிகழ்ச்சியில் உறுதியளித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழனியாண்டவர் சேகோ நிறுவனத்தில், மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை நேரில் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, கடந்த நான்கு மாதத்தில் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக தேர்தலுக்கு முன்பு மக்களை சந்தித்து வாக்கு கேட்டபோது அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.
மக்களின் கருத்தைக் கேட்டு, உணர்வை புரிந்துகொண்டு, அதற்கேற்ப இந்த ஆட்சி நடந்துவருகிறது. நாங்கள் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் வேளாண்மைத் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, மாவட்டந்தோறும் அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளைப் பெற்று, அதன்பிறகுதான் பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்துள்ளோம்.
ஜவ்வரிசிக்கு நியாயமான விலை கிடைக்கவும், கலப்படத்தை ஒழிக்கக் கண்காணிப்புக் குழு அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
கடந்த நான்கு மாதத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்காக 2 மாநாடுகளை நடத்தியுள்ளோம். புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருகிறோம். தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனை முதல் இடத்திற்குக் கொண்டு வர செயலாற்றிவருகிறோம். நகரம், கிராமம், மாவட்டம் என வேற்றுமை இல்லாமல், தொழில் பாகுபாடு பார்க்காமல் தமிழ்நாடு அரசு தொழில் கொள்கையை வகுத்துள்ளது.
இந்தியாவில் ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னிலை மாவட்டமாக உள்ள சேலத்தை, சர்வதேச அளவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்." இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார். இதையடுத்து மரவள்ளி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியாளர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து பேசினர்.
முன்னதாக, சேலம் சேகோ சர்வ் வளாகத்தில் 1.26 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள மின் ஏல மையம் மற்றும் 34 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள நேரடி விற்பனை முனைய கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார். பேட்டரி வாகனத்தில் சென்று ஜவ்வரிசி ஆலையைப் பார்வையிட்டார்.