Skip to main content

அச்சங்குளம் வெடி விபத்து... உயிரிழப்பு 21 ஆக உயர்வு! 

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

Achankulam Fire incident... 21 passedaway

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில், கடந்த 12.02.2021 அன்று பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் 20 பேர் உயிரிழந்தனர்.

 

திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும், பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், 7 மாத கர்ப்பிணி உட்பட 20 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 7 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏழு பேரையும் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி பட்டாசு ஆலையின் குத்தகைதாரர் பொண்ணுப்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி மற்றொரு குத்தகைதாரரான சக்திவேல், அவரது மனைவி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி நேற்று (18.02.2021) அதிகாலை கைது செய்யப்பட்டார். 

 

மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 21 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளியான வைஜெயந்திமாலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 16 பேர் சாத்தூர், மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்