தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியா முழுவதும் ஓடக்கூடிய ஜீவநதிகள் தேசியமயமாக்கி நதிகள் இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் நிலையில் அதனை ஏற்க மறுத்து மவுனம் காத்து வரும் மத்திய அரசு அனைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர முயற்ச்சிப்பது ஏன்? காவிரி வழக்கில் நீதிமன்றம் அனைகள் மாநில கட்டுப்பாட்டில் இருக்கவும், ஆறுகளும், தண்ணீரும் மாநிலங்களுக்கு சொந்தமில்லை என தெளிவுபடுத்திய பிறகும் இச்சட்டம் தேவையற்றது.
இது முற்றிலும் மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகளை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, மாநில அரசுகளை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் முயற்ச்சியாகும். எனவே அனைகள் பாதுகாப்புச் சட்டத்தை கைவிட்டு நதிகளை தேசியமாக்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.
சேலம் 8 வழி சாலை தேவையில்லை...
சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு இரண்டு நான்கு வழிச்சாலைகள் உள்ள நிலையில் மேலும் புதிய வழியில் 8 வழி சாலை அமைப்பது தேவையற்றது. ஒரு சில பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சுங்க வரி மூலம் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சாலை அமைக்கும் பணிகளை மேற்க்கொள்கிறது. எனவே அவர்களுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் துணை போவது கண்டிக்கது.
நிலம் கையகப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் வழி முறைகளை பின்பற்ற மறுத்து காவல்துறையைக் கொண்டு விவசாயிகள் மீது அடக்குறையை கையால்வது கண்டனத்திற்குரியது. மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களது உரிமைகள் குறித்து எடுத்துரைக்ககூட அனுமதி மறுப்பதும், விவசாயிகளை அழைத்து பேசி அவர்களின் ஒப்புதலை பெற உரிய முறையில் முயற்ச்சிக்காமல் பொய் வழக்குப் போட்டு சிறையிலடைக்க முயற்ச்சிப்பது ஜனநாயக விரோதமானது. விளை நிலங்களையும்,வீடுகளை இழக்கப் போகிறோம் என்று கதறும் மக்களின் கண்ணீரை துடைக்க மறுப்பதும், மக்களாட்சி நடைபெறும் தமிழகத்தில் பெரும்பான்மை விவசாயிகளின் கருத்து சுதந்திரம் பறிபோவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி ஆணையம்
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்திரவில் மாற்றங்கள் செய்யாவிட்டால் செயல்படுத்த இயலாது என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இது குறித்து மத்திய அரசும், நீர்வளத் துறை ஆணையமும் தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
கர்நாடக அனைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அம்மாநில அரசு உபரி நீரை மட்டும் தமிழகத்திற்கு திறந்து விடுவதும், உபரி நீர் குறைந்தால் உடன் அடைத்து விடுவதையும் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குறியது.
ஆணையம் அமைப்பதை கர்நாடகம் ஏற்க மறுத்து வரும் நிலையில் அனைகளின் தண்ணீர் விநியோகிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஏற்க மறுப்பது, தனது பொருப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி வெற்றி விழா பின்னடைவு...
இந்நிலையில் தமிழக அரசு முழு அதிகாரம் கொண்ட ஆணையம் அமைத்து உரிய தண்ணீரை பெற்று வழங்குவதற்க்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், முதலமைச்சர் தனக்கு தானே அவசரப்பட்டு வெற்றி விழா நடத்திக் கொள்வது காவிரி ஆணையம் அமைக்கும் நடவடிக்கையில் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.