கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் போன்ற மாவட்டங்களில் தற்போது ‘வெஸ்ட் நைல்’ எனும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால், 10க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனையடுத்து இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுவதை வெஸ்ட் நைல் வைரஸ் என்று பெயரிப்பட்டிருக்கிறது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் என்பது ‘க்யூலெக்ஸ்’ வகை கொசுக்களால் மனிதர்களுக்கு பரவக்கூடியது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படுவது இல்லை.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். மேலும், ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் போன்றவை ஏற்படும். மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். எலைசா, பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக, வெஸ்ட் நைல் வைரஸ் இருப்பதை கண்டறியலாம். தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் கொசு பரவலை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லை என்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இந்த வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது இது குறித்து பேசுகையில், “வெஸ்ட் நைல் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவதற்கு நாம் இருக்க கூடிய வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளையொட்டி தேவையற்ற இடங்களில் தேங்கி நிற்கின்ற தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து 13 வழிகளின் வழியே தமிழகத்திற்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கரம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் எல்லையில் தொடர்ந்து பொது சுகாதாரத்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.