Skip to main content

“விரைவில் 90 எம்.எல். டெட்ரா மது பாக்கெட்...” - அமைச்சர் முத்துசாமி தகவல்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

"90 ml Tetra Wine Pocket Project soon" - Minister Muthuswamy informed

 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அண்மையில் முத்துசாமி அந்த துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மதுவை 90 எம்எல் டெட்ரா பாக்கெட்டுகளில் விற்கத் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

 

டெட்ரா மதுபாக்கெட்டுகள் குறித்த செய்திகள் வெளியான நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கர்நாடகாவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180 எம்.எல். பாட்டிலில் மது விற்கப்படுகிறது. அதை முழுமையாக குடிப்பதற்கு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். டெட்ரா பாக்கெட் ஆய்வில் தான் உள்ளது‌. பெரும் பகுதியான கடைகளில் அதிகளவு விற்பனையாகும் மது குறித்து சர்வே எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் எதிர்பார்க்கும் மதுவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தற்பொழுது கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் முத்துசாமி அதனை உறுதி செய்துள்ளார். ‘90 எம்.எல் டெட்ரா  மது பாக்கெட் திட்டம் விரைவில் வரும். இது மது பாட்டில்கள் உடைக்கப்படுவதற்கு மாற்றாக கொண்டு வரப்படும் புது முயற்சியே தவிர, மது குடிப்போரை அதிகரிக்கவோ, விற்பனையை அதிகரிக்கவோ மேற்கொள்வதற்கான முயற்சி அல்ல. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையைக் கட்டுப்படுத்த சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்