
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி ‘மக்கள் அதிகாரம்’ சார்பில் இந்தி பிரச்சார சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது பிஜேபி கட்சிக் கொடியை எரிக்க முயன்றனர். கொடியை எரிக்க முயன்றவர்களை போலிசார் கைது செய்தனர். செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் அதிகாரம் அமைப்பினர், காவிரி உரிமைக்காக திருச்சியில் இந்தி பிரச்சார சபா நிறுவனத்தை முற்றுகையிட்டும், இந்தி எழுத்துக்களை அழித்தும், பி.ஜே.பி கொடியை எரித்தும் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் தோழர்களை காட்டுமிரண்டித்தனமாக தாக்கி கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது போலீஸ்.

குறிப்பாக இந்தியை அழித்த 5 பேரை கடுமையாக தாக்கி தனியாக போலீசு நிலையத்தில் வைத்தது. தற்போது பி.ஜே.பி கொடியை எரித்ததற்காகவும், இந்தியை அழித்ததற்காகவும் மேலிட பிரஷர் என்று கூறி 85 பேரையும் சிறையிடைக்கிறார்கள் அடிமை எடப்பாடி அரசின் போலீசு. டெல்டாவின் 4 மாவட்ட விவசாயம், சென்னை உள்ளிட்ட 13 மாவட்ட மக்களின் உயிராதரமான குடிநீர் ஆகியவற்றிற்காக போராடுவது குற்றமா ? குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என 85 பேரை கிரிமினல்கள் போல் சிறையிடைப்பதை அனுமதிக்கக் கூடாது. உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் இந்த போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் குரலெழுப்புவோம்! காவிரி உரிமைப் போராட்டத்தை தொடர்வோம் என்றார்கள்.
தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்த அத்தனை பேரையும் வழக்கு பதிவு செய்து ஜெ.எம். 4 திருநாவுக்கரசர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சொல்ல உத்தரவிட்டார்.