ஐரோப்பாவில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதியில் இயங்குகிறது பிரபலமான எரிசக்தி நிறுவனமான டெல்ஜ் எனர்ஜி. இந்த நிறுவனத்தின், 'குழந்தைகள் காலநிலை அறக்கட்டளை' சார்பில், உலகம் முழுவதும் உள்ள அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தை தெரியப்படுத்தவும், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மாற்றியமைக்கவும் தேவையான ஆலோசனை, திட்டங்களை கட்டுரைகளாக அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த திட்டத்துக்கு 2016 முதல் பரிசுகள், சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது இந்நிறுவனம். இதில், 12 வயது முதல் 17 வயதுள்ளவர்கள், இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
முக்கியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காலநிலை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள் இந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்து, சிறந்ததை தேர்வு செய்கிறார்கள். அதன்படி, இந்தியாவில் இரண்டு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மகாராஷ்ட்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்தாண்டு நடத்தப்பட்ட போட்டியில், உலகம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர். அதில், திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் வினிஷா உமாஷங்கர் என்ற மாணவியும் கலந்துகொண்டார். அதில், தான் கண்டறிந்த சோலார் சலவைப் பெட்டியைப் போட்டிக்கு அனுப்பியுள்ளார்.
துணிகளை இஸ்திரி செய்தவற்கு, மரக்கரி தேவைப்படுகிறது. இதற்காக மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இப்படி மரங்களை வெட்டுவது, எரிப்பது என்பது இயற்கைக்கு எதிரானது, அது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இதனைத் தடுக்க வேண்டுமென்றால், இயற்கையைப் பாதிக்காத வகையில், மாற்று ஒன்றைக் கண்டறிய வேண்டும். அந்த மாற்று இதுதான் என, தான் கண்டறிந்த சோலார் சலவைப் பெட்டியை போட்டிக்கு அனுப்பியுள்ளார். சோலார் பெட்டியின் மீது சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரத்தை தயாரித்து, அதன் வழியாக துணியை இஸ்திரி செய்வதே இதன் பயன்பாடு என அந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளார்.
இதனைத் தேர்வு செய்த போட்டியின் நடுவர்கள், காற்று மாசுபடுத்திய கரிக்கு மாற்றாக ஒரு ஸ்மார்ட் வடிவமைப்புடன், வினிஷா அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான முறையில் சூரிய சக்தியில் இயங்கும் சலவைப் பெட்டியைக் கண்டறிந்துள்ளார். பெரிய அளவில் இது செயல்படுத்தப்பட்டால், இது இந்தியாவின் காற்றின் தரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அற்புதமான கண்டுபிடிப்பாகும். ஒரு இளம் விஞ்ஞானி சுத்தமான காற்றின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பல நன்மைகளைத் தரும் எனச்சொல்லி தேர்வு செய்துள்ளனர்.
வெற்றி பெற்ற இந்த இருவருக்கும் பட்டம், பதக்கம் மற்றும் பரிசுத்தொகை 8.5 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி, கோவிட் பரவல் காரணமாக, இணைய வழியில், நவம்பர் 18 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகளும் பரிசுகளைப் பெற்றனர்.