Skip to main content

விவசாயிக்கு விவசாயியே துணை - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் ஆச்சரியம்!!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

8 way road farmers support to farmers

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வடமாத்தூர் கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் மஞ்சுளா தலைமையில் எட்டு வழிச் சாலை அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை, திருவண்ணாமலை - சேலம் செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுமையாகச் சேதம் அடைந்த நிலையில் அதனை அகலப்படுத்திச் சரிவரச் சாலை அமைக்காத மத்திய மாநில அரசுகள், விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை மற்றும் பசுமை சாலை என அறிவித்து பசுமையை அழிக்க நினைக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழிச்சாலை வழக்கை திரும்பப்பெறவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

இந்தக் கூட்டத்தில் 8 வழிச்சாலை அமைவதால் தாங்கள் பாதிக்கப்படாத  சூழ்நிலையிலும் 8 வழிச்சாலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திப் பல விவசாயிகள் கலந்துகொண்டனர். 

 

எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபிராமன் விவசாயச் சங்கத்தைச் சார்ந்த அழகேசன் மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும் இதேபோல் விவசாயிகளைத் திரட்டி போராடப்போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்