கரோனா தொற்று காரணமாக மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் சண்முகப்பிரியா.
இவர் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த சண்முகப்பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மதுரையில் கரோனா தொற்று இரண்டாம் அலையில் முதன்முதலாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதுரை மாநகரிலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சண்முகப்பிரியா கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். முன் களப்பணி வீரராக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது. மருத்துவர்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன்.
மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.