புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் திருமணஞ்சேரி ஊராட்சி மேலமஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளேஸ்வரன். இவரது மனைவி கலைமணி (வயது31). இவர் கோட்டைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சுகாதார தன்னார்வலராகக் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கலைமணி மீண்டும் கருவுற்ற நிலையில் பரிமளேஸ்வரன் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் 18 வார கர்ப்பிணியான கலைமணி நேற்று (14.08.2024) தனது தோழியுடன் பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று ஸ்கேன் செய்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண் குழந்தை என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதே மருத்துவமனையில் கலைமணிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கலைமணி திடீரென உயிரிழந்துள்ளார்.
இது பற்றிய தகவல் கலைமணி குடும்பத்தினருக்கு நேற்று இரவு தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கலைமணி உடலைக் கொண்டு வந்துள்ளனர். மேலும் கலைமணியின் உறவினர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று பார்த்துக் கருக்கலைப்பு செய்து உயிரைப் பறித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இன்று (15.08.2024) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாளை (16.08.2024) 2 குழுக்கள் ஆய்வுக்குச் சென்று நடவடிக்கை எடுப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுகாதார தன்னார்வலருக்கே இந்த நிலையா என்று கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், ஸ்கேன் செய்து வயிற்றில் உள்ள கருவின் பாலினம் பற்றி வெளியே சொல்வதும் குழந்தையைக் கருவில் அழிப்பதும் குற்றம் என்று அரசு கடுமையாக எச்சரித்தும் கூட ஒரு சிலர் பணத்திற்காகத் தொடர்ந்து தவறு செய்வதைத் தடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.