Skip to main content

சிவகங்கையில் திருடி கீரமங்கலத்தில் விற்கப்பட்ட 70 பைக்குகள்; கொத்தாக அள்ளிய தனிப்படை

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

70 bikes stolen in Sivaganga and sold in Keeramangalam

 

சமீப காலமாக பைக் திருட்டுகள் அதிகரித்துள்ளன. திருடப்படும் பைக்குகளை கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதிக விலை உள்ள பைக்குகளும் கூட ரூ.10 ஆயிரத்திற்குள்ளேயே  விற்பனை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, காரைக்குடி, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்த நிலையில், சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சில பைக் திருடர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

 

தனிப்படை போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள், சிவகங்கை மாவட்டத்தில் திருடப்படும் பைக்குகளை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள சிலரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறியுள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை தனிப்படை போலீசார், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வந்து குறிப்பிட்ட நபர்களிடம் விசாரணை செய்தபோது, குடோன்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 70க்கும் மேற்பட்ட திருட்டு பைக்குகளை மீட்டதுடன் திருட்டு பைக் வாங்கி விற்பனை செய்த சிலரையும் பிடித்துள்ளனர். மேலும் வெளியில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளையும் மீட்டு லாரிகளில் ஏற்றி சாக்கோட்டைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

70 bikes stolen in Sivaganga and sold in Keeramangalam

 

இதேபோல் கீரமங்கலம் பகுதியில் திருடப்படும் பைக்குகளை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 70 திருட்டு பைக்குகள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்களையும் திருட்டு பைக்குகளை குறைந்த விலைக்கு வாங்கி நம்பர் பிளேட் மாற்றி விற்பனை செய்தவர்களையும் தொடர்ந்து விசாரித்தால் மேலும் நூற்றுக்கணக்கான பைக்குகள் சிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்