
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா, ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு அவமானம் ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.
இதுதொடர்பாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டி மனு தாக்கல் செய்தார் பாரதிராஜா. மனுவை விசாரித்த ஐகோர்ட், சைதாப்பேட்டை கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 3 வாரங்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் இந்த நிபந்தனையை பாரதிராஜா நிறைவேற்றவில்லை. இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று பாரதிராஜா தரப்பில் புதிதாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்தார். முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத பாரதிராஜாவுக்கு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதற்காக நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்று நீதிபதி ராஜமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பாரதிராஜா வழக்கறிஞர் பிரபாகரன், பாரதிராஜாவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் சரியில்லை என்று கூறினார்.
இப்போது நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
பாரதிராஜா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் பல தவறுகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியதுடன், பாரதிராஜாவின் மனுவுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் முகமது ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்வதாகவும் அவரது வக்கீல் பிரபாகரன் கூறினார். இதை ஏற்றுக் கொண்டார்.