Skip to main content

அம்மா உணவகங்களில் நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு இலவச உணவு! - தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்!

Published on 13/05/2020 | Edited on 14/05/2020

 

7 lakh free meals day at amma restaurants

 

தமிழகம் முழுவதும் உள்ள 654 அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கி வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு மூன்று நேரமும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதைப்போல, தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்கள் மட்டுமல்லாது, கிராமப்புறங்கள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளுக்கும், அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை  விரிவுபடுத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் பாவேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

 


இந்த மனு,  நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும்  புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன்,  ‘ஊரடங்கு சூழலை கருத்தில் கொண்டு  எளிய மக்களுக்கு மூன்று நேரமும் இலவச உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகம் முழுவதுமுள்ள  ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும், நாளொன்றுக்கு 31,500  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மொத்தமுள்ள  654 உணவகங்களிலும், ஒரு நாளைக்கு 7 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இது தவிர,  சமூக நலக் கூடங்கள், சமுதாயக் கூடங்கள் மூலமாகவும் ஆங்காங்கே உணவு சமைக்கப்பட்டு ஏழை எளியோருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..’ என்று எடுத்துரைத்தார். 

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்க,  வழக்கை தள்ளுபடி செய்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்