மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு காலத்தில் தேடப்படும் பிரபல ரவுடியாக இருந்தார். தங்க நகைகள் அணிவதில் ஈடுபாடு கொண்ட வரிச்சியூர் செல்வம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கிலோ கணக்கில் கழுத்து, கைகளை ஆபரணங்களால் நிரப்பிக்கொண்டுதான் போவார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன் விமானத்தில் அருகே அமர்ந்து சென்றது, காஞ்சிபுரம் அத்திவரதரை விஐபி தரிசனத்தில் பார்த்தது என சில ஆண்டுகளுக்கு முன் வைரலாக தென்பட்டார். அதிலும் கரோனா நேரத்தில் 10 பவுனில் மாஸ்க் செய்து அணிகொண்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. தற்பொழுது ரவுடி வரிச்சியூர் செல்வம் திருந்தி வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் வரிச்சியூர் செல்வம் நகைக்கடை ஒன்றில் 100 பவுன் மதிக்கத்தக்க முறுக்கு செயினை அணிந்துகொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் கடையின் ஊழியர்களே அந்த ஜெயினை செல்வத்திற்கு அணிவித்தனர். இத்தொடர்பாக வருமானவரித்துறை விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மதுரை சொக்கிகுளம் வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " வரிச்சியூர் செல்வம் 100 பவுன் மதிக்கத்தக்க முறுக்கு செயினை அணிந்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அப்படி அவர் வாங்கியிருந்தால் அந்த நகைக்கான பணத்தை சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் ரொக்கமாக கொடுத்தாரா? அல்லது காசோலையாகக் கொடுத்தாரா? என விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வளவு அதிக தங்கம் வாங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது, அந்த நகைக்கு ஜிஎஸ்டி செலுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம்" என்றார்.