நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கடந்த ஆறு மாதங்களில் 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி., சாய்சரண் ஜேதஸ்வி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்திக்குறிப்பு; நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் உணவுப்பாதுகாப்புத் துறை இணைந்து மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட கட்டுப்பாட்டு பிரிவுக்கு 9498181216 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.