சேலத்தில், ஒரே இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 540 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
சேலத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ், பான் பராக் உள்ளிட்ட போதையூட்டக் கூடிய புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர், பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் சூரமங்கலம் ஸ்டேட் வங்கி காலனியில் தேநீர் கடை நடத்தி வரும் சிவக்குமார் (வயது 49) என்பவர், ஹான்ஸ் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறை உதவி ஆணையர் நாகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட தேநீர் கடையில் சோதனை நடத்தினர். அவருடைய கடையில் இருந்து ஹான்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த சாதிக் அலி (வயது 39) என்பவர் பெங்களூருவில் இருந்து ஹான்ஸ், குட்கா போதைப் பொருள்களை தருவித்து, சிவக்குமார் உள்ளிட்ட சேலத்தில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து சாதிக் அலி மற்றும் அவருடைய கூட்டாளிகளான திரு நகரைச் சேர்ந்த நஸ்ருதீன் (வயது 46), ஓமலூர் கோட்டக்காட்டைச் சேர்ந்த ரசாக் (வயது 47) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் அருகே ஓரிடத்தில் பதுக்கி வைத்திருந்த 540 கிலோ குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும்.