
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதைந்து கிடக்கும் வரலாற்றுத் தொன்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர்திருக்கை தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் புதிய கற்கால 2 கைக்கோடரிகளைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :
"தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கருவி புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரியாகும். இக்கோடரி ஒரு புறம் வெட்டுவதற்காகவும் தோண்டுவதற்கும் வசதியாகக் கூர்மையாகவும், மறுபுறம் கைப்பிடி அமைப்பதற்காகத் தட்டையாகவும் உள்ளது.
கைக்கோடரியின் நீளம் 12.5 செ.மீ., அகலம் 4.7 செ.மீ., மற்றொரு கோடரி நீளம் 7 செ.மீ., அகலம் 3.5 செ.மீ. உள்ளது. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். மனித குலத்தின் தொன்மை வரலாற்றை பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம். பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத் தேடி அலைந்து நிலையான இருப்பிடம் இன்றி வாழ்ந்தான். புதிய கற்காலத்தில் மனிதன் தனக்கென ஒரு நிலையான வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றான். இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள் மற்றும் சக்கரத்தால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளான்.
புதிய கற்கால கருவிகள் மனிதன் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளைத் தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது. இப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் கிடைத்துள்ளது. இரும்பு சார்ந்த பொருட்கள் கிடைத்துள்ளதால் இரும்பை உருக்கி பயன்படுத்தவும் அக்கால மக்கள் அறிந்திருந்தனர் என அறிய முடிகிறது. இதுபோன்ற புதிய கற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் மயிலாடும்பாறை, மாங்குடி, பையம்பள்ளி , கல்வராயன் மலை உள்பட பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன" என்று கூறினார்கள்.