கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், உள்ளிட்ட டெல்டா பகுதியில் கடந்த 6 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம்ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி மழை தண்ணீரை பொதுப்பணித்துறையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெள்ளியங்கால்ஓடை, வி.என்.எஸ்.எஸ் வாய்க்கால் மூலம் வெளியேற்றினர். இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், லால்பேட்டை, சிறகிழந்த நல்லூர், குமராட்சி,கீழவன்னியூர், அத்திபட்டு, கீழக்கரை,வடக்குமாங்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500- க்கும் மேற்பட்ட நெல் வயல்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நெல்வயல்களில் தொடர்ந்து தண்ணீர் நிற்பதால் பயிர் அழிந்துவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் இந்த ஆண்டு உரியநேரத்தில் தண்ணீர் வந்தது அதனை கொண்டு கடனை உடனை வாங்கி நல்ல முறையில் விவசாயத்தை மேற்கொண்டோம். பயிர் நன்கு வளர்ந்தது தற்போது பெய்த மழையால் நிலத்தில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக மூழ்கியுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இதனை ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வாய்க்கால்களில் செல்லும் தண்ணீர் அளவும் குறைந்து வயல்வெளிகளிலும் விரைவில் தண்ணீர் வடியும் என பொதுப்பணித்துறையினர் கூறினார்கள்.