
காரைக்குடியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையில் ஈடுபட்டவர்களை போலீசார் துரத்தி பிடித்துள்ளனர்.
காரைக்குடி மாவட்டம் சேர்வை ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான மனோ என்கிற மனோஜ். கஞ்சா விற்பனையில் மனோஜ் ஈடுபட்ட நிலையில் அது தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில் இன்று காலை 9 மணியளவில் காவல் நிலையத்தில் கையெழுத்திட தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரவுடி மனோஜை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மனோஜின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கும் நிலையில் உடன் வந்த இரண்டு இளைஞர்களுக்கு காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. படுகொலை நடந்த பகுதி காரைக்குடியின் முக்கிய வணிகப் பகுதியாகும். எப்பொழுதுமே ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இப்படிப்பட்ட கொலை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் பிஜில் படுகொலை செய்யப்பட்டதும், ஈரோட்டில் சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காரைக்குடியில் நடந்த இந்த கொலை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிராவயல் காட்டுப் பகுதி அருகே கொலையில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையில் ஈடுபட்ட 23 வயதான குரு பாண்டி, விக்கி, சண்முகராஜ் ஆகிய மூவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு குரு பாண்டியின் தந்தை ரவுடி கும்பல் ஒன்றால் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலை சம்பவத்தில் ரவுடி மனோஜ்க்கும் தொடர்பு இருப்பதாக எண்ணி, பழி தீர்ப்பதற்காக குரு பாண்டி சக கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி மனோஜை திட்டம் தீட்டி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை நடந்த மூன்று நேரத்திலேயே சிராவயல் வனப்பகுதியில் பதுங்கி இருந்த மூவரையும் போலீசார் சினிமா பாணியில் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.