புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
’’காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. ஒழுங்காற்று குழுவோ அல்லது காவிரி மேலாண்மை வாரியமோ அமைக்காமல் மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. புதுச்சேரி வந்த பிரதமரை சந்தித்து நானும் அமைச்சர்களும் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வலியுறுத்தினோம்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஏக மனதாக முடிவை எடுத்தோம். பிரதமருக்கு மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடிதம் எழுதினேன். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக்கூறியும் பிரதமரிடமிருந்து பதில் இல்லை. சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படவேயில்லை. சட்டமன்றம் கூடும் போது வந்து 5 நிமிடம் சட்டமன்றத்தில் அமர்ந்து வெளிநடப்பு செய்வதே அவர்கள் வேலை. குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் என்ற என்.ஆர்.காங்கிரஸின் பகல் கனவு பலிக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்மானத்தை காங்கிரஸ் திமுக அதிமுக ஒன்றாக இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால் அப்போது கூட என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வோம். சட்டரீதியான நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்கும். எவ்வகையிலும் இதில் புதுச்சேரி அரசு பின்வாங்காது. தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன். அரசியல் கட்சிகளுடன் இணைந்து பேசி போராட்டம் அறிவிப்போம்.’’