தர்மபுரி இரட்டைக் கொலை வழக்கில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு, சேலம் கூலிப்படை கும்பலை ஏவி கேரளா தொழில் அதிபர்களை கொலை செய்திருப்பதும், ஒருவரை தீர்த்துக்கட்ட 5 லட்சம் வீதம் இருவரையும் போட்டுத்தள்ள 10 லட்சம் ரூபாய் கூலியாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅள்ளியில், செயல்படாத நிலையில் ஒரு பழைய கல் குவாரி உள்ளது. இந்த குவாரி அருகே, ஜூலை 20ம் தேதியன்று கேட்பாரற்று ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த கார் நின்ற இடத்தில் இருந்து சுமார் 150 மீ. தொலைவில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கிடந்தன. அவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை காவல்நிலைய காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணையில், சடலமாகக் கிடந்தவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் (50), நிவில் ஜார்ஜ் குரூஸ் (58) என்பது தெரிய வந்தது. அவர்கள் உள்ளூரில் அரிதான பொருள்களை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். சடலத்தின் அருகில் இருந்த கார், ஜூலை 19ம் தேதியன்று இரவு சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார், கேரளா பதிவெண் கொண்டது என்பதால் கொல்லப்பட்ட நபர்களின் வாகனமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த கொலை, இரிடியம் உலோக மோசடி தொடர்பாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் சடலம் கிடந்த பகுதியை சுற்றியுள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்கள், கொல்லப்பட்ட இருவரின் செல்போன்களுக்கு கடந்த ஒரு மாதமாக வந்த அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறை தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினர் கொலையாளிகளை நெருங்கிய நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த ரகு (45), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் (38), சுரேன்பாபு (35), விஷ்ணுவர்மன் (30) ஆகிய நான்கு பேர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் நால்வரும் தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த பிரபாகரன் (40), லட்சுமணன் என்கிற அபு (37) ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நான்கு பேரையும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) மூன்று நாள்கள் காவலில் எடுத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த நந்தகுமார், இளங்கோ, கார்த்திக் ஆகியோர் கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சிவகுமார், நிவில் ஜார்ஜ் குரூசுக்கு அரிதான இரிடியம் உலோகம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை அவர்கள் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் துபாய்க்குச் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், அவர்கள் இருவரையும் நைசாக பேசி கேரளாவுக்கு அழைத்துள்ளார். இதையடுத்து நந்தகுமார் தரப்பினர், சிவகுமார், நிவில் ஜார்ஜ் குரூஸ் ஆகிய இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த ரவுடி ரகு தலைமையிலான கூலிப்படை கும்பலை பயன்படுத்தியுள்ளனர்.
ஒருவரின் தலைக்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இருவரையும் தீர்த்துக்கட்ட 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இதையடுத்து நந்தகுமார், தன்னிடம் மற்றொரு அரிதான இரிடியம் உலோகம் இருப்பதாகக்கூறி, கேரளாவில் இருந்து சிவகுமாரையும், நிவில் ஜார்ஜ் குரூஸையும் சேலத்திற்கு அழைத்துள்ளார்.
சேலம் அருகே உள்ள அரியானூரைச் சேர்ந்த ரகு என்பவரிடம் இரிடியம் இருப்பதாகவும், அவரிடம் வாங்கிக் கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதற்கு உதவியாக சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன், பிரபாகரன் உதவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரியானூர் சென்றதும், பிரபாகரன், லட்சுமணன் ஆகிய இருவரையும் அனுப்பிவிட்ட ரகு தலைமையிலான கூலிப்படையினர் சிவகுமார், நிவில் ஜார்ஜ் குரூஸ் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு, ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உள்ள காட்டேஜூக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த குடியிருப்பில் வைத்து அவர்கள் இருவரையும் அடித்துக் கொலை செய்திருக்கிறது கூலிப்படை. பின்னர் சடலங்களை அவர்கள் வந்த காரிலேயே ஏற்றிக்கொண்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளிக்கு கொண்டு சென்று, பழைய கல்குவாரி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். காரை அங்கேயே நிறுத்திவிட்டு, கொலையாளிகள் வேறு ஒரு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட மேட்டூரைச் சேர்ந்த நந்தகுமார், அவருடைய மற்ற கூட்டாளிகள் இளங்கோ, கார்த்திக் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.