அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்புகளில் இருந்தே போட்டித் தேர்வுத் திறனை வளர்க்கும் விதமாக தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம், +2 முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல 9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் நடந்த தேசிய திறனாய்வுத் தேர்வில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 179 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 78 பேர் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக, அறந்தாங்கி ஒன்றியத்தில் மட்டும் 17 பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும், பெரியாளூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து மட்டும் 10 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதே போலம், குன்னக்குரும்பி அரசுப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ, மாணவிகள் தேர்வாகி உள்ளனர். ஆவணத்தான்கோட்டை கிழக்கு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.
போட்டித் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக கல்வித்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். மேலும் அவர், சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்தார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, “மாணவர்களை இளம் வயதிலேயே போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கும் இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும், ஊக்கப்படுத்திய கல்வித்துறை அதிகாரிகளையும், பாராட்டுவதோடு சாதித்துக் காட்டிய மாணவ, மாணவிகளையும் மனதார பாராட்டுகிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமையில், நான் பெரியாளூர் மேற்கு வழியாக சென்ற போது, அந்த ஊரில் இருந்த பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆசிரியை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இறங்கிச் சென்று போய் அவரிடம், ‘என்ன பாடம் எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசிரியை, தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பதாக சொன்னார். இன்று அந்தப் பள்ளியில் இருந்து மகா சாதனை படைத்து ஒரே பள்ளியில் 10 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. விடுமுறையிலும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பயின்ற மாணவர்களுக்கும் பாராட்டுகள்.
கல்வி ஒன்றே அழிக்க முடியாத செல்வம். இன்று பாராட்டுப் பெற வந்த ஒரு மாணவன் எங்கள் பள்ளியில், மாணவிகளுக்கு கழிவறை உள்ளது, மாணவர்களுக்கு இ்ல்லை கட்டிக் கொடுங்கள் என்று கேட்டார். அந்த மாணவரை பாராட்டுகிறேன். இதற்கான துணிச்சலை கொடுத்தது கல்விதான். மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
சிறந்த தலைமை ஆசிரியர் பச்சலூர் ஜோதிமணியின் முயற்சியால், நிறைய பள்ளிகள் மாறிக் கொண்டிருக்கிறது என்பது பெருமையாக உள்ளது. அதே போல அறந்தாங்கி ஒன்றியத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 122 மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இது போன்ற சாதனைகளை ஒவ்வொரு பள்ளியிலும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார். இந்த விழாவில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.