
புதுச்சேரி மாநிலம், முத்தையால் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷபான் (36). பி.சி.ஏ பட்டதாரியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், கணவரை விவாகரத்து செய்த 40 வயதுமிக்க பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக இணையதளத்தில் முன் பதிவு செய்திருந்தார். இதை அறிந்த கொண்ட முகமது ஷபான், தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்று கூறி அந்த பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதனால், இவர்கள் திருமணம் செய்யவும் முடிவு செய்து அடிக்கடி வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளனர்.
அதன் பிறகு, முகமது ஷபான், அந்த பெண்ணிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். இவருடைய பேச்சை நம்பிய அந்த பெண்ணும் மறுக்காமல் முகமது ஷபான் கேட்ட பணத்தை அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, முகமது ஷபான், அந்த பெண்ணிடம், ‘உங்கள் குடும்பதுக்கு யாரோ செய்வினை வைத்துள்ளார்கள். அதனால், மசூதியில் மந்திரம் ஓதி சரிசெய்தால் வருங்காலத்தில் நாம் நன்றாக இருக்கலாம். இதற்கு நிறைய பணம் தேவை, அதனால், உன்னுடைய நகையை தந்தால் பூஜை செய்துவிட்டு திருப்பி தந்துவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார். இவரின் பேச்சை நம்பி அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக 415 பவுன் நகையை கொடுத்துள்ளார். நகையை வாங்கிய முகமது ஷபான் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அந்த பெண்ணை விட்டு விலகி தலைமறைவாகிவிட்டார்.
அதன் பிறகு தான், தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் இந்த சம்பவம் குறித்து முகமது ஷபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை ஏமாற்றிய முகமது ஷபான், இவர் மட்டுமல்லாது பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். மறுமணம் செய்ய காத்திருக்கும் பெண்கள், கணவரை பிரிந்து விவாகரத்தான பெண்கள் ஆகியவர்களை நோட்டமிட்டு குறிவைத்து இது போல் ஏமாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த முகமது ஷபான் செல்போனின் சிக்னலை கண்காணித்து வந்த காவல்துறையினருக்கு, அவர் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக புதுச்சேரிக்கு விரைந்த காவல்துறையினர், முகமது ஷபானை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பெண் பறிகொடுத்த 415 பவுன் நகைகளில் சிலவற்றை அடகு வைத்தும், இன்னும் சிலவற்றை விற்பனை செய்தும் வந்துள்ளார் முகமது ஷபான். அவற்றை மீட்பதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.