சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பேசிய முதல்வர், “தொழில் தொடங்குவதற்கு 100 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றும் எம்.எஸ்.எம்.ஏ துறையின் முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க சிறு குறு தொழில் நிறுவனங்கள் அவசியம்.
சென்னை, கோவை போன்ற தொழில் மிகு நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்குத் தரமான, குறைந்த விலையும் தங்குமிட வசதி என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது. இதற்குத் தீர்வாக அரசு தங்கும் விடுதிகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாகச் சென்னை, கோவை ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 6000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஸ்டாட் ஆப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட ஸ்டாட் ஆப் நிறுவனங்களின் எண்ணிக்கையை விடக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட ஸ்டாட் ஆப் நிறுவனத்தின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம். இதுவே திமுக ஆட்சியின் வேகத்தைப் பறைசாற்றும் வகையில் உள்ளது.
மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதைப் போல் நடப்பு நிதியாண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்களை நிறுவவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 6 தொழிற்பேட்டைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.