Skip to main content

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Chief Minister M.K. Tribute to Stalin in person

 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தி குறிப்பில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி மிகவும் மதித்துப் போற்றத்தக்கது.

 

அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல் நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என தெரிவித்திருந்தார்.

 

Chief Minister M.K. Tribute to Stalin in person

 

இந்நிலையில் மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துகொண்டார். அதே போன்று அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து பங்காரு அடிகளார் உடல், அவரது வீட்டிலிருந்து தியான மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்