“எங்கள விடுங்க.. நாங்க வெளிய போகணும்” என கதறும் வெளிமாநில பெண்கள், “அதெல்லாம் அனுப்ப முடியாது.. முதல்ல உள்ள போங்க” என கட்டாயப்படுத்தும் விடுதி ஊழியர்களின் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஏராளமான வெளிமாநில இளைஞர்களும் பெண்களும் வேலை செய்துவரும் நிலையில், அவர்கள் அனைவரும் காண்ட்ராக்டர்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, இங்கு வேலை செய்துவரும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அவர்களுடைய தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய, தனியார் கல்லூரிகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், எஸ்விஎஸ் மார்க்" என்கிற அடுக்குமாடி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குடியிருப்பில் தங்கியிருந்த இரண்டு வெளிமாநில பெண்கள், தங்களது அறையை காலி செய்துவிட்டு லக்கேஜ் பையுடன் அந்த விடுதியை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது, அந்த விடுதியின் மெயின் கேட்டில் இருந்த செக்யூரிட்டிகள், அந்த இளம்பெண்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக உள்ளே செல்ல கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ஊழியர்களின் நடவடிக்கையால் அச்சமடைந்த இளம்பெண்கள், தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு செக்யூரிட்டிகளிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளனர். அந்த சமயம், அவ்வழியாக சென்ற சிலர், இச்சம்பவத்தை கவனித்துள்ளனர். அப்போது, "என்னம்மா ஆச்சி.. எதுக்கு இந்த பொண்ணுங்கள வெளிய விடமாட்றீங்க" என அவர்கள் கேட்டதற்கு, அந்த செக்யூரிட்டிகள் பதில் எதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து, கண்ணீர்விட்டு கதறும் அந்த இளம்பெண்களையும், கேட்டை விட்டு வெளியே அனுப்பாத செக்யூரிட்டிகளையும் அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது, இது சம்மந்தமான வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர், விடுதி நிர்வாகத்திடம் விசாரணை செய்து வருவதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.